Sunday 11 May 2014

கணித ஈடுபாடு இல்லையெனில் இன்ஜி., பக்கம் போக வேண்டாம்: ரைமண்ட் உத்திரியராஜ்

சென்னை: இன்ஜினியரிங் படிப்புகளுக்கு கல்லூரி தேர்வுதான் முக்கியம்; அதில் கவனமாக இருங்கள். கணக்கு, எனக்கு சரிப்பட்டு வராது என நினைப்போர், இன்ஜி., படிப்பை தேர்வு செய்ய வேண்டாம் என தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் பேசினார்.


கணக்குதான் முக்கியம்

அண்ணா பல்கலையின், தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் ஆலோசனை வழங்கி பேசியதாவது: பிளஸ் 2 முடிந்து நிறைய மதிப்பெண் வந்துவிட்டது. 14 ஆண்டு பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்குள் நுழைகிறீர்கள். கணக்கு எனக்கு வராது, எப்படியோ படித்து மதிப்பெண் பெற்று விட்டேன் என நினைப்பவர்கள், இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்ய வேண்டாம். இன்ஜி., படிப்புக்கு கணக்குதான் முக்கியம். கணக்கில் நல்ல ஈடுபாடு இருந்தால்தான் இன்ஜி., படிப்பு வரும்.

பாடம் படிக்க, நடத்தும் ஆசிரியர்கள் முக்கியம். அதனால், இன்ஜினியரிங்கில் எந்த பிரிவு எடுப்பது என்பதை விட, நல்ல கல்லூரிகளை தேர்வு செய்வது அவசியம். கவர்ச்சி விளம்பரங்களை நம்ப வேண்டாம். கல்லூரி முதல்வர், ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அந்த கல்லூரியில் வேலை செய்கிறாரா; பேராசிரியர்கள் நீண்ட காலம் பணியாற்றுகிறார்களா? என்று பாருங்கள். இவர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு இருந்தால், நிர்வாகம் சரியில்லை என்றே அர்த்தம்.

படிப்புக்கு ஏற்ற சோதனைக் கூடங்கள் உள்ளதா? கல்லூரிகளில் படித்தோருக்கு வேலை வாய்ப்புத்திறன் எப்படி உள்ளது; காலத்திற்கேற்ற தொழில்நுட்ப வசதிகள் உள்ளதா? மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வாய்ப்புகள்; நான்கு ஆண்டுகளுக்குப் பின் தன் சுய விவரத்தில் (Resume) மதிப்பீடு அதிகரிக்க முடியுமா? போதிய வசதிகள் உள்ளதா; பேராசிரியர்-மாணவர்கள் நட்பு எப்படி உள்ளது என்றெல்லாம் விசாரியுங்கள்.


நீங்கள் விரும்பும் பிரிவு

எது, எதற்கோ நேரத்தை செலவிடுகிறோம். எதிர்காலத்தை நிர்ணயிக்கும் படிப்பில் சேர, நல்ல கல்லூரியை கண்டறிய நேரம் செலவிடுங்கள். 10 கல்லூரிகளை தேர்வு செய்து நேரில் போய் பாருங்கள். மூன்று, நான்காம் ஆண்டு படிப்போரிடமும் விசாரித்து, மதிப்பீடு செய்து, ஆறு கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள். நீங்கள் விரும்பும் பிரிவு எந்த கல்லூரியில் கிடைக்கிறதோ அதில் சேருங்கள். மேலும் தேர்வு செய்யும் கல்லூரியின் கட்டணத்தை, நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நம்மால் கட்ட முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும். இப்படி ஒரு மதிப்பீடு செய்துவிட்டால் கவுன்சிலிங் எளிதாகிவிடும்.


நல்ல கல்லூரி எது?

கவுன்சிலிங் மையத்திற்கு போய், கம்ப்யூட்டர் ஆபரேட்டரிடம், எந்த கல்லூரி சேரலாம் என கேட்காதீர்கள். அவர்கள் ஆபரேட்டர்கள்தான். எதிர்பார்த்த கல்லூரிகளில் இடம் இல்லை என்றால், அடுத்த நல்ல கல்லூரி எது என தேர்வு செய்ய வேண்டும். கூட அழைத்துச் செல்பவர், உங்களின் நலன் சார்ந்தவராக இருக்கட்டும். பெற்றோரைத் தவிர, உங்கள் நலன் சார்ந்தோர் யாரும் இருக்க முடியாது. கல்லூரிகள் தேர்வில் கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கவுன்சிலிங்கிற்காக இரண்டு மாதங்கள் உழைத்த உழைப்பு வீணாகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment