Sunday 11 May 2014

மே 14 முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இம்மாதம் 14ல் துவங்குகிறது. ஜூன் 2ம் தேதிக்குள், விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் (383) போக, 2,172 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். இதுதவிர 13 சுயநிதி கல்லூரிகளில் இருந்தும், 860க்கும் மேலான இடங்கள் மாநில ஒதுக்கீடாக கிடைக்கும்.

இந்த இடங்களுக்கு, கட் -ஆப் மதிப்பெண் அடிப்படையில், கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணி, மே 14ல் துவங்கும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இம்மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தால் போதும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன் 2ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை, www.inhealth.org, www.tn.gov.in என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment