Sunday, 12 October 2014

தடைக்கல்லும் படிக்கல்லும்

தடைக்கல்லும் படிக்கல்லும்


கெட்டதில்தான் இருக்கும் நல்லது
 
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நாம் எப்படி உணர்ந்து அதை எப்படி அணுகுகிறோம் என்பது மிகவும் முக்கியம் என்று சொல்லும் ஹாலிடே தடைக்கல்லை படிக்கல்லாக்கும் அணுகுமுறையை நாம் கடைபிடிக்கும் போது நமக்கு சிறந்த பலமாக இது இருக்கின்றது. அதை கடைபிடிக்கத் தவறினால் அது பலவீனமாக மாறுகிறது. 

தடைகளை எதிர்த்துப் போராடுவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பானது, நாம் அந்த தடைகளை ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் எளிமையாகவும், நேர்மையாகவும் அணுகுவதிலேயே இருக்கின்றது. கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப்போல ஒவ்வொரு தடையிலும், சோதனையிலும் கண்டிப்பாக ஒரு “வெற்றி வாய்ப்பு” ஒளிந்துகொண்டிருக்கிறது என்கிறார் ரயன் ஹாலிடே. 

நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை. நமது எண்ணங்களே அதை அவ்வாறாக மாற்றுகிறது என்று சொன்ன ஷேக்ஸ்பியரை மேற்கோள் காட்டும் ஹாலிடே ஒரே சூழ்நிலை, ஒருவருக்கு பாசிடிவ்வாகவும் மற்றொருவருக்கு நெகடிவ்வாகவும் அமைவதை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம் என்கின்றார். மழை, டுவீலரில் அலுவலகம் சென்றுவரும் ஒருவருக்கு இடையூறாகத் தெரிகிறது, அந்த மழையே ஒரு விவசாயிக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. அதனால் எண்ணங்களைக்கொண்டு சூழ்நிலை களையும், செயல்களையும் மதிப்பிடுங்கள் என்கிறார் ரயன் ஹாலிடே. 

எந்தவொரு சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்பட்டு பொங்கிவிடக் கூடாது என்று கூறும் ஹாலிடே, உணர்ச்சிவசப்பட்டு அதன்மூலம் பீதி அடைவதனால், நாம் நமது செயலில் தவறுகளை உடனடியாகச் செய்ய ஆரம்பிக்கிறோம் என்கிறார். எந்த ஒரு சூழ்நிலையிலும் பீதியடை யாமலிருக்கும் கலையே அமெரிக்க விண்வெளி வீரர்களுக்கு முதலில் கற்றுத்தரப்படுகிறது. அதனாலேயே அணுகுமுறையில் மாற்றம் செய்தால் எளிதில் வெற்றியடையலாம் என்று கூறும் ஹாலிடே, அமெரிக்க திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ஜார்ஜ் க்ளூனி சந்தித்த ஆரம்பகால நிராகரிப்பு களை வரிசையாய் நினைவுகூர்கிறார். மாறுபட்ட அணுகு முறையால் மட்டுமே அவரால் ஹாலிவுட்டில் வெற்றிபெற முடிந்தது என்கிறார். 

ட்ரை பண்ணுங்க சார்
 
தைரியத்தின் அவசியத்தை ஹாலிடே மிகவும் அறிவுறுத்திச் சொல்கின்றார். தைரியமான செயல் பாடுகள் மட்டுமே எப்போதும் நம்மை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும், அதற்காக தைரியம் என்றால் துடுக்கான, முரட்டுத்தனமான வேகம் என்று நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறும் ரயன் ஹாலிடே நமது செயல்களும், முடிவுகளுமே நம்முடைய வெற்றியை மட்டுமல்ல நம்மையே தீர்மானிக்கின்றன என்கிறார். ஒரு இலக்கை நோக்கி நாம் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும் நேரம், எதிர்கொள்ளும் தடைகளால் கோபமடைந்து, என்ன செய்வதென்றே தெரியாமல் அமைதியாக இருந்து விடக்கூடாது. 

மேலும், மேலும் முயற்சி செய்து கொண்டிருக்கவேண்டும். அப்படி முயற்சி செய்யத் தவறும்போது நாம் ஒரு அடி கூட முன் வைக்க முடியாமல், இருக்கும் அதே நிலையிலேயே இருந்துவிடுவோம். அது கூடப் பரவாயில்லை. ஏன் இப்படியே போனால் ஒரு ஸ்டேஜில் வேறு எந்த ஒரு காரியத்தையும் - ஏன் எதையுமே செய்ய முடியாத நிலைக்குக் கூடத் தள்ளப்பட்டு விடுவோம் என்று எச்சரிக்கிறார் ரயன் ஹாலிடே. 1878-ல் மின்சாரத்தின் மூலம் எரியும் பல்பை கண்டுபிடிக்க ஒரு கூட்டமே முயற்சித்துக்கொண்டு இருந்தது. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மெட்டீரியலினால் ஆன இழைதனைக் கொண்டு பல்பை தயாரிக்க முயன்று கொண்டும் அதில் தோல்வியடைந்துகொண்டும் இருந் தார்கள். ஆனால் தாமஸ் ஆல்வா எடிசன் மட்டுமே சுமார் ஆறாயிரம் வகை மெட்டீரியல்களினால் ஆன இழைகளை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக டெஸ்ட் செய்ய தயாராக இருந்தார். ஒவ்வொரு முறையும் தீர்வை நோக்கி சென்று தோல்வியுற்று மீண்டும் மற்றொன்றின் மூலம் முயற்சி செய்து இறுதியாக டங்க்ஸ்டன் இழையை உபயோகித்து பல்பை எரிய வைத்து வெற்றியும் பெற்றார். 

ஒரு செயலில் முயற்சிசெய்து சில தடைகளினால் தோல்வியடைகின்றீர்கள், அந்தச் செயலை அத்தோடு விட்டுவிடாமல் தொடர்ந்து சிந்தித்து மேம்படுத்தப்பட்ட புதிய முறையில் அப்ரோச் செய்யும்போது அந்த தோல்வியே வெற்றிக்கு உண்டான மூலதனமாக மாறுகின்றது. ஒவ்வொரு முறை தோல்வியின்போதும் நமக்கு ஒரு புது வாய்ப்பு கிடைக்கிறது, அதாவது தடைகளே வழிகளாக மாறுகின்றன. அப்புறமென்ன ட்ரை பண்ணிகிட்டே இருக்க வேண்டியதுதானே!. 

தோல்வியே அதிகம் பரிசோதிக்கப்படுகின்றது
 
முற்காலத்தில் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் யூகத்தின் அடிப்படையிலேயே கஸ்டமர்களின் தேவைகளை அறிந்து அதனை தயாரித்து கொடுத்துவந்தன. எத்தனை யோ புராடக்ட்கள் லாஞ்ச் செய்யப்பட்ட நாளிலேயே பிளாப் ஆன செய்திகளைப் பார்த்திருக்கிறோம். அந்த நிமிடமே புராடக்ட்டுக்காக செய்யப்பட்ட அத்தனை உழைப்பும் வீணாகிறது. ஒருவேளை அது வெற்றி அடைந்திருந்தால், அந்த வெற்றிக்குப்பின்னால் இருக்கும் செயல்களை நிறுவனத்தில் யாரும் பெரிதாக ஆராய்ந்து தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. 

ஆனால் தோல்வி அடைந்ததால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து, மாறுதல்கள் பல செய்து மீண்டும் கஸ்டமர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சியெடுக்கின்றார்கள். வெற்றி களைவிட தோல்விகளே அதிகம் கவனிக்கப்பட்டு வலிமையடை கிறது என்பது இதிலிருந்து தெரிகின்ற தில்லையா என்கின்றார் ஹாலிடே. 

என்னவொரு தைரியம்
 
வாழ்க்கையில் நடக்குற ஒவ்வொரு நிகழ்வையும் லவ் பண்ணுங்க, அது நல்லதோ கெட்டதோ, அந்த நேரத்தில் அதை என்ஜாய் செய்துவிடவேண்டும். மேலும் அதற்கான மனவலிமையும் வேண்டும். தனது 67வது வயதில், தாமஸ் எடிசன் ஒரு நாள் மாலை தன் ஆய்வுக்கூடத்திலிருந்து வீடு திரும்பி டின்னரை முடித்த சிறிது நேரத்தில், தனது ஆய்வுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதை தெரிந்துக்கொள்கிறார். தீயணைப்பு வண்டிகள் பல வந்தும் தீயை அணைக்க முடியவில்லை. பல கெமிக்கல்கள் சேர்ந்து மஞ்சள் பச்சை என தீயானது கலர் கலராக எரிந்துகொண்டிருந்தது.

வேகமாக அங்கு வந்த எடிசன் தன் மகனிடம் உடனே போய் உன் அம்மாவையும், அவளோட நண்பிகளையும் அழைத்துக் கொண்டுவா என்றார். ஏன் தெரியுமா? இதுபோன்ற தீ விபத்து நிகழ்வை மறுபடியும் அவர்களால் ஒருபோதும் பார்க்கமுடியாது என்பதால்தான். அவரைப்பொருத்தவரை விபத்து நடந்துவிட்டது, அதை இனி தடுக்க முடியாது அதேசமயம் அதை என்ஜாய் பண்ணுவதை இழக்கவும் அவர் விரும்பவில்லை.
முறையான அணுகுமுறை, அதற்கேற்ற செயல்பாடு மற்றும் மனவலிமை மூன்றும் சேரும்போது எளிதாக தடைகளை படிகளாக மாற்றி வெற்றிபெற முடியும் என்பதே இந்த புத்தகத்தின் மூலம் ரயன் ஹாலிடே நமக்கு சொல்லும் செய்தி.

Monday, 15 September 2014

வேலை உங்களைத் தேடி வர வேண்டுமா?

தகுதி என்பதில் உள்ள 'த' என்பது தன்னம்பிக்கையையும், 'கு' என்பது குறிக்கோளையும், 'தி' என்பது திறமையையும் குறிக்கிறது. ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி.
 
தன்னம்பிக்கைக்கான பண்புகள்
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள கீழ்க்காணும் பண்புகள் வேண்டும்.

 1. உங்களுடைய தோல்விகளுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். ஒருபோதும் மற்றவர்களைக் குறை கூறாதீர்கள்.
2. திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள்.
3. சுயபச்சாதாபம் கொள்ளாதீர்கள். 

தோல்வி வந்தால் இனிமேல் தோல்வி நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். சிந்திக்கத் சிந்திக்க தெளிவு பிறக்கும். தெளிவான மனம் ஆற்றலின் அட்சயப் பாத்திரமாக மாறும். வெற்றி உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும். 

ஆனால் தோல்வி தான் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். தோல்விக்குப் பொறுப்பேற்கும் போதுதான் தன்னம்பிக்கையும் மனவலிமையும் அதிகமாகிறது. 

அத்துடன் சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத்திறன் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் திறன், இயக்கத்திறன் போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளும்போது, தன்னம்பிக்கையும் கூடவே வளர்கின்றது. நம்மாலும் முடியும் என்ற எண்ணமே தன்னம்பிக்கையாகும். 

தொடர் முயற்சி
ஒருபோதும் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிப் பரிதாபப்படாதீர்கள். ஒரு சிறிய விதையின் உள்ளே விருட்சம் இருப்பதைப் போல உங்களுக்குள்ளாகப் பரிபூரண
ஆற்றல் மறைந்திருக்கிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு அவற்றையெல்லாம் சாதனைகளாக்குங்கள். முதலில் தோல்வி நேர்ந்தாலும் முயல முயல வெற்றிகள் மலரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். 

மேற்கண்ட தகுதியுடன் தொழில் சார்ந்த நுட்பத்திறனும் (Technical Skills), மனித உறவுத்திறனும் (Human Relation Skills) உங்களுக்கு இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்! 

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் தேவையான திறன்களையும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு லட்சியச் சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம். 

பரவலாகவா, ஆழமாகவா?
பலர் நிறையப் படிப்பது எங்காவது பயன்படும் என்று ஸ்திரமாக நம்புகிறார்கள். என் அறிவுரை இதுதான்: நிறையப் பாடங்களைப் பரவலாக மேம்போக்காகப் படிப்பதை விட ஒரு விஷயத்தை ஆழமாகத் தொடர்ந்து படியுங்கள். பட்டத்தைவிடப் பாட அறிவும், செய்திறனும், அதனைச் சந்தைப்படுத்தும் முறைகளும் முக்கியம்.
எது படித்திருந்தாலும் அத்துறையில் வந்த புது விஷயங்களைத் தொடர்ந்து படித்துப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். அதுதான் நிஜமான அறிவு. பெயருக்குப் பின் வரும் பட்டங்கள் அல்ல. 

பெருங்காய டப்பாவா?
நீங்கள் செய்யும் வேலை தான் உங்கள் அறிவையும் திறனையும் வெளிப்படுத்தும். நீங்கள் என்றோ வாங்கிய பட்டங்கள் முன்பு பயன்பட்டது போல வருங்காலத்தில் பயன்படாது.
முன்பெல்லாம் ஒரு முறை படித்து விட்டு ஒரு முறை வேலைக்கு சேர்ந்தால் அது காலம் முழுதும் கை கொடுக்கும். இன்று படிப்பு, வேலை, தொழில் அனைத்தும் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து கற்க வேண்டிய வித்தையாக மாறி வருகிறது என்பதுதான் உண்மை!
உங்கள் படிப்பு காலி பெருங்காய டப்பாவா அல்லது அட்சயப் பாத்திரமா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!! 

மென் திறன்கள்
மென் திறன் தகுதிகள் என்பது, படிப்பைத்தவிர, உங்களுடைய பேச்சுத் திறன், தலைமைப் பண்பு, நம்பகத்தன்மை, உங்களுடைய தனிப்பட்ட குணாதிசயங்கள், நீங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வல்லவரா, நீங்கள் பயந்தாங்கொள்ளியா, பொது இடங்களில் பேசுவதற்குக் கூச்சப்படுவீர்களா, எதிர் பாலினத்தவரிடம் பேச யோசிப்பீர்களா போன்றவையாகும். 

இது தவிர, நேரக்கட்டுப்பாடு, எதுவும் முடியும் என்ற பாசிட்டிவ்வான எண்ணம், கூர்ந்து கவனிக்கும் திறன், உங்களுடைய ஆளுமைத் திறன், தன்னையும் மற்றவரையும் எந்நேரமும் உத்வேகப்படுத்துதல் உள்ளிட்டவையே. இன்றைய சூழ்நிலையில் அவசியமாகின்றன.
இந்தத் தகுதிகள் அனைத்து மனிதர்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு இருந்தே ஆக வேண்டும்.
# யதார்த்தமாக வாழப் பழகிக்கொள்வது
# கல்வியோடு கூட மென் திறன்களையும் தெரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது
# நம்மால் முடியும் என்ற முழு தன்னம்பிக்கை
என்ற மூன்றையும் கடைபிடித்தால் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.


Sunday, 11 May 2014

மே 14 முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இம்மாதம் 14ல் துவங்குகிறது. ஜூன் 2ம் தேதிக்குள், விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் (383) போக, 2,172 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். இதுதவிர 13 சுயநிதி கல்லூரிகளில் இருந்தும், 860க்கும் மேலான இடங்கள் மாநில ஒதுக்கீடாக கிடைக்கும்.

இந்த இடங்களுக்கு, கட் -ஆப் மதிப்பெண் அடிப்படையில், கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணி, மே 14ல் துவங்கும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இம்மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தால் போதும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன் 2ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை, www.inhealth.org, www.tn.gov.in என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணித ஈடுபாடு இல்லையெனில் இன்ஜி., பக்கம் போக வேண்டாம்: ரைமண்ட் உத்திரியராஜ்

சென்னை: இன்ஜினியரிங் படிப்புகளுக்கு கல்லூரி தேர்வுதான் முக்கியம்; அதில் கவனமாக இருங்கள். கணக்கு, எனக்கு சரிப்பட்டு வராது என நினைப்போர், இன்ஜி., படிப்பை தேர்வு செய்ய வேண்டாம் என தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் பேசினார்.


கணக்குதான் முக்கியம்

அண்ணா பல்கலையின், தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் ஆலோசனை வழங்கி பேசியதாவது: பிளஸ் 2 முடிந்து நிறைய மதிப்பெண் வந்துவிட்டது. 14 ஆண்டு பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்குள் நுழைகிறீர்கள். கணக்கு எனக்கு வராது, எப்படியோ படித்து மதிப்பெண் பெற்று விட்டேன் என நினைப்பவர்கள், இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்ய வேண்டாம். இன்ஜி., படிப்புக்கு கணக்குதான் முக்கியம். கணக்கில் நல்ல ஈடுபாடு இருந்தால்தான் இன்ஜி., படிப்பு வரும்.

பாடம் படிக்க, நடத்தும் ஆசிரியர்கள் முக்கியம். அதனால், இன்ஜினியரிங்கில் எந்த பிரிவு எடுப்பது என்பதை விட, நல்ல கல்லூரிகளை தேர்வு செய்வது அவசியம். கவர்ச்சி விளம்பரங்களை நம்ப வேண்டாம். கல்லூரி முதல்வர், ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அந்த கல்லூரியில் வேலை செய்கிறாரா; பேராசிரியர்கள் நீண்ட காலம் பணியாற்றுகிறார்களா? என்று பாருங்கள். இவர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு இருந்தால், நிர்வாகம் சரியில்லை என்றே அர்த்தம்.

படிப்புக்கு ஏற்ற சோதனைக் கூடங்கள் உள்ளதா? கல்லூரிகளில் படித்தோருக்கு வேலை வாய்ப்புத்திறன் எப்படி உள்ளது; காலத்திற்கேற்ற தொழில்நுட்ப வசதிகள் உள்ளதா? மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வாய்ப்புகள்; நான்கு ஆண்டுகளுக்குப் பின் தன் சுய விவரத்தில் (Resume) மதிப்பீடு அதிகரிக்க முடியுமா? போதிய வசதிகள் உள்ளதா; பேராசிரியர்-மாணவர்கள் நட்பு எப்படி உள்ளது என்றெல்லாம் விசாரியுங்கள்.


நீங்கள் விரும்பும் பிரிவு

எது, எதற்கோ நேரத்தை செலவிடுகிறோம். எதிர்காலத்தை நிர்ணயிக்கும் படிப்பில் சேர, நல்ல கல்லூரியை கண்டறிய நேரம் செலவிடுங்கள். 10 கல்லூரிகளை தேர்வு செய்து நேரில் போய் பாருங்கள். மூன்று, நான்காம் ஆண்டு படிப்போரிடமும் விசாரித்து, மதிப்பீடு செய்து, ஆறு கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள். நீங்கள் விரும்பும் பிரிவு எந்த கல்லூரியில் கிடைக்கிறதோ அதில் சேருங்கள். மேலும் தேர்வு செய்யும் கல்லூரியின் கட்டணத்தை, நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நம்மால் கட்ட முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும். இப்படி ஒரு மதிப்பீடு செய்துவிட்டால் கவுன்சிலிங் எளிதாகிவிடும்.


நல்ல கல்லூரி எது?

கவுன்சிலிங் மையத்திற்கு போய், கம்ப்யூட்டர் ஆபரேட்டரிடம், எந்த கல்லூரி சேரலாம் என கேட்காதீர்கள். அவர்கள் ஆபரேட்டர்கள்தான். எதிர்பார்த்த கல்லூரிகளில் இடம் இல்லை என்றால், அடுத்த நல்ல கல்லூரி எது என தேர்வு செய்ய வேண்டும். கூட அழைத்துச் செல்பவர், உங்களின் நலன் சார்ந்தவராக இருக்கட்டும். பெற்றோரைத் தவிர, உங்கள் நலன் சார்ந்தோர் யாரும் இருக்க முடியாது. கல்லூரிகள் தேர்வில் கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கவுன்சிலிங்கிற்காக இரண்டு மாதங்கள் உழைத்த உழைப்பு வீணாகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

Thursday, 16 January 2014

நேர்முகத் தேர்வு - முக்கிய கேள்வி


பல்வேறான நேர்முகத் தேர்வுகளில், இறுதி கேள்வியாக, "நீங்கள் எங்களிடம் எதுவும் கேட்க விரும்புகிறீர்களா?" என்பதாகவே இருக்கும். அதுபோன்ற கேள்வி கேட்கப்பட்டால், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஜனநாயகத் தன்மையுடனும், நன்கு பக்குவமடைந்தும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
ஆனால் அதுபோன்ற கேள்விக்கு, "என்னிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை என்றும், கமிட்டி உறுப்பினர்கள்தான், நேர்முகத் தேர்வில் கேள்விகளை கேட்க வேண்டும்" என்ற பதிலை கட்டாயம் சொல்லக்கூடாது.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, முடிந்தளவு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அவற்றில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால், அதுபோன்ற நேரங்களில் தரப்படும் வாய்ப்பை பயன்படுத்தி கேள்விகளை கேட்டு அவர்களை ஆச்சர்யப்பட வைக்க முடியும். இதனால் உங்களின் முக்கிய சந்தேகங்களும் தீர்க்கப்படும்.

நிறுவனத்தின் நடப்பு புராஜெக்ட்டுகள், எதிர்கால திட்டங்கள், நீங்கள் பணியமர்த்தப்படக்கூடிய இடம் மற்றும் பணியில் சேர வேண்டிய தேதி(தேர்வு செய்யப்பட்டால்) போன்றவை கேட்கப்படக்கூடிய சில முக்கிய கேள்விகள்.

மன அழுத்த சூழல்கள்
நேர்முகத் தேர்வின்போது, பல தேர்வு கமிட்டி உறுப்பினர்கள், கலந்துகொள்ளும் நபரிடம் மனஅழுத்தத்தை உண்டாக்க முயல்வார்கள். இதன்மூலம் அவர் எவ்வாறு react செய்கிறார் என்பதை அறிந்துகொள்வது அவர்களின் நோக்கம்.

ஏனெனில், ஒரு நிறுவனப் பணி என்பது, ரோஜா மெத்தையில் படுத்திருப்பது போன்றதோ அல்லது தென்றலில் இளைப்பாறுவது போன்றதோ அல்ல. அதிக சவால்களும், நெருக்கடிகளும், இக்கட்டான சூழல்களும் நிறைந்தது. இதற்கேற்ப ஒரு பணியாளர் தயாராக இருக்க வேண்டியது முக்கியம்.
எனவே, உங்களிடமிருந்து சரியான reaction வருகிறதா என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். வருங்காலத்தில், பணியமர்த்தப்படக்கூடிய ஒருவரின் மனநிலையை சரியாக அறிந்துகொள்ளும் வகையில், Electro encephalograph போன்ற மருத்துவ உபகரணங்களை நிறுவனங்கள் பயன்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதுபோன்ற சோதனையில், நீங்கள் வாயைத் திறந்து எதையும் பேசவில்லை என்றாலும்கூட, உங்களின் மாறும் முகபாவனைகள், உங்களின் உடல் மொழிகள் போன்றவற்றை ஆராய்ந்து அவர்கள் மனநிலையை கணித்து விடுவார்கள்.

ஒரே நேரத்தில்...
உங்களின் மனவலிமையை அறியும் சோதனையில், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஒருவர் பின் ஒருவராக உங்களிடம் கேள்விகளை கேட்காமல், ஒரேநேரத்தில், பலவிதமான கேள்விகளை அனைவரும் கேட்பார்கள்.
இதுபோன்ற சூழலில், நீங்கள் இப்படி சொல்லக்கூடாது, "இப்படி கேட்டால் நான் எதற்கு பதில் சொல்வது? என்னால் பதில் சொல்ல இயலாது. தயவுசெய்து ஒவ்வொன்றாக கேளுங்கள்" என்பதுதான் அது.
மேலும், முக்கிய அம்சம் என்னவென்றால், உங்களின் முக பாவனையை கடுமையாகவும், குழப்பமாகவும் மாற்றி வைத்துக்கொள்ளக்கூடாது. உடலில் கலவரம் இருக்கக்கூடாது. நீங்கள் ஏதோ இக்கட்டில் மாட்டிக் கொண்டதுபோல் காட்டிக்கொள்ளக்கூடாது.

ஏனெனில், நேர்முகத் தேர்வு என்பது போர்க்களமல்ல. உங்களை சோதிக்கும் ஒரு களம்தான் என்பது எப்போதுமே மனதில் இருத்தப்பட வேண்டும்.
மாறாக, நீங்கள் இவ்வாறு கூறவேண்டும், "நீங்கள் அனைவரும் கேட்ட கேள்விகளில், இந்த கேள்விக்கு முதலில் பதிலை சொல்கிறேன். பிறகு இந்த கேள்விக்கும், அதனையடுத்து, மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்" என்று எந்த பதட்டமும் இல்லாமல், மிருதுவாக கூற வேண்டும்.

இதைத்தான் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பார்கள். நேர்முகத் தேர்வு எவ்வளவு நேரம் நீடித்தாலும், நீங்கள் எந்தவித எரிச்சலையோ, சலிப்பையோ அல்லது சோர்வையோ, எந்த வகையிலும் கட்டாயம் வெளிப்படுத்தவேக் கூடாது. அப்படி வெளிக்காட்டினால், அதுவே தகுதியிழப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

ஒரு முக்கிய தாரக மந்திரத்தை நினைவில் கொள்வது ஒவ்வொருவருக்கும் அவசியம். அது நேர்முகத் தேர்வுக்கு மட்டுமல்ல. வாழ்க்கை முழுவதற்கும்தான்.

"எப்போதும் உனது நிதானத்தை இழந்துவிடாதே" என்பதுதான்.

Tuesday, 7 January 2014

புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் படித்தால் சம்பளம் எவ்வளவு?

ஐ.ஐ.எம்., போன்ற நாட்டின் முதல்தர வணிகப் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் பிரதான இலக்கு, படித்து முடித்து பல லட்சங்கள் சம்பளம் வாங்க வேண்டும் என்பதே.

எனவேதான், அத்தகைய கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவதற்கு, கேட் போன்ற தேர்வுகளை ஆர்வமாக எழுதுகிறார்கள். இக்கட்டுரையில், நாட்டின் பிரதான வணிகப் பள்ளிகளில் படிப்பவர்கள், சராசரி அளவில் மற்றும் உயர்ந்தபட்ச அளவில் எந்தளவு அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது.


வணிகப் பள்ளி சராசரி சம்பளம் உயர்ந்தபட்ச சம்பளம்
ஐ.ஐ.எம்., பெங்களூர் ஆண்டிற்கு ரூ.17.30 லட்சம் தகவல் இல்லை
மேலாண்மைத் துறை, டில்லி பல்கலை ஆண்டிற்கு ரூ.16 லட்சம் தகவல் இல்லை
எக்ஸ்.எல்.ஆர்.ஐ., ஜாம்ஷெட்பூர் ஆண்டிற்கு ரூ.16.02 லட்சம் தகவல் இல்லை
மேலாண்மைத் துறை, ஐ.ஐ.டி., டில்லி ஆண்டிற்கு ரூ.12.03 லட்சம் ஆண்டிற்கு ரூ.18 லட்சம்
ஐ.ஐ.எப்.டி., டில்லி ரூ.12.40 லட்சம் ரூ.22 லட்சம்
எஸ்.பி.ஜே.ஐ.எம்.ஆர்., மும்பை ரூ.16.13 லட்சம் தகவல் இல்லை
என்.எம்.ஐ.எம்.எஸ்., மும்பை ஆண்டிற்கு ரூ.14.40 லட்சம் ஆண்டிற்கு ரூ.30 லட்சம்
ஐ.ஐ.எம்., இந்தூர் ஆண்டிற்கு ரூ.12 லட்சம் தகவல் இல்லை
ஐ.ஐ.எம்., கோழிக்கோடு ஆண்டிற்கு ரூ.12.31 லட்சம் ஆண்டிற்கு ரூ.32 லட்சம்
ஐ.ஐ.எம்., ராஞ்சி ஆண்டிற்கு ரூ.12.04 லட்சம் ஆண்டிற்கு ரூ.19 லட்சம்
ஐ.ஐ.எம்., ராய்ப்பூர் ஆண்டிற்கு ரூ.12.03 லட்சம் ஆண்டிற்கு ரூ.19 லட்சம்
ஐ.ஐ.எம்., ஷில்லாங் ஆண்டிற்கு ரூ.11.75 லட்சம் ஆண்டிற்கு ரூ.22 லட்சம்
ஐ.ஐ.எம்., திருச்சி ஆண்டிற்கு ரூ.10.92 லட்சம் ஆண்டிற்கு ரூ.18.25 லட்சம்
மேலாண்மைத் துறை, ஐ.ஐ.டி., சென்னை ஆண்டிற்கு ரூ.9 லட்சம் ஆண்டிற்கு ரூ.14 லட்சம்
வி.ஜி. மேலாண்மை பள்ளி, ஐ.ஐ.டி., காரக்பூர் ஆண்டிற்கு ரூ.10.45 லட்சம் தகவல் இல்லை
ஐ.ஆர்.எம்.ஏ ஆண்டிற்கு ரூ.7 லட்சம் ரூ.13.05 லட்சம்
எக்ஸ்.ஐ.எம்.பி PGDM BM - ஆண்டிற்கு ரூ.11.81 லட்சம்
PGDM HRM - ஆண்டிற்கு ரூ.9.04 லட்சம்
PGDM BM ஆண்டிற்கு ரூ.17.25 லட்சம்
PGDM HRM ஆண்டிற்கு ரூ.14.03 லட்சம்
எக்ஸ்.ஐ.எஸ்.எஸ் ஆண்டிற்கு ரூ.6.75 லட்சம் ஆண்டிற்கு ரூ.12.50 லட்சம்

Tuesday, 17 September 2013

விமான பயணம் கேள்வி-பதில்

ஆகாயத்தில் அதிசயமாக நாம் பார்ப்பதில் முக்கிய இடம் பிடிப்பது விமானங்கள்தான். சில வேளைகளில் அழியாத நெடுங்கோடாகப் புகை விட்டுக்கொண்டு பறக்கும் ஜெட் விமானங்கள் என்றால் சில நேரங்களில் நமக்கு ஓசைகூட கேட்கும் அல்லது கேட்பது போன்ற பிரமை ஏற்படும். வலவன் ஏவா வானவூர்தி அல்ல என்றாலும் அதில் ஏறிப் பயணம் செய்யாதவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு முறையாவது ஏறிச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுவது இயற்கைதான். ஆனால், அதில் அடிக்கடி சென்று பயணப்பட்டவர்களுக்கோ சில - பல சந்தேகங்கள் தோன்றித் தோன்றி மறையும். ஆசையாகவும் மகிழ்ச்சியாகவும், சில வேளைகளில் அச்சத்துடனும் விமானங்களில் செல்வோரே அதிகம். அவர்களில் பலருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை தருகிறார் விமானி பேட்ரிக் ஸ்மித். ‘காக்பிட் கான்பிடன்ஷியல்’ என்ற பெயரில் அவர் எழுதியிருக்கும் தகவல்கள் அனைவருக்குமே பொதுவானவை. பயணிகளின் சந்தேகங்களுக்குக் கேள்வி-பதில் வடிவில் அவர் சில விளக்கங்களைத் தந்திருக்கிறார். 

விமானம் பறக்கும்போது திடீரென தூக்கித்தூக்கிப் போடுவதும் அப்படியும் இப்படியும் அலைக்கழிப்பதும் குலுங்குவதும் என்னைக் குலைநடுங்கச் செய்கிறது, செத்துவிடுவோமோ என்றுகூட அஞ்சுகிறேன், இந்த அச்சம் நியாயமானதுதானே? 

இல்லை. விமானத்தை அப்படியே தலைகீழாகத் தூக்கிப் போடும்படியோ, விண்ணிலிருந்து வீசி எறியும் வகையிலோ எதுவும் நடந்துவிடாது.காற்றழுத்தம் குறைவான வான் பகுதியில் விமானம் செல்லும்போது குலுங்குவது இயல்பானது. அது உங்களுக்கு அச்சத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம், ஆனால் அதனால் விமானம் கீழே விழுந்துவிடாது. 

ஜெட் விமானத்தின் எல்லா இன்ஜின்களும் செயலிழந்துவிட்டால் விமானத்தால் பத்திரமாகத் தரை இறங்க முடியுமா? 

முடியும். மலையிலிருந்து கீழே இறங்கும்போது உங்களுடைய கார் இன்ஜினை அணைத்துவிட்டால் எத்தனை ஆபத்தோ அத்தனை ஆபத்து இதில் இருந்தாலும் விமானத்தைத் தொடர்ந்து இயக்கவும் தரையில் இறக்கவும் முடியும். 

விமானத்திலிருந்து எரிபொருளைக் கொட்டிவிட முடியும் என்று தெரிகிறது, விமானம் இறங்கும்போது எடை குறைய வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்களா? 

ஆமாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்ல. விமானம் மேலே எழும்போது இருக்கும் எடையைவிட கீழே இறங்கும்போது இருக்கும் எடையானது அதற்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நெருக்கடியான நேரங்களில் அந்த நெருக்கடியைக் குறைக்க எரிபொருள் வெளியே கொட்டப்படுகிறது. இது அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரிய விமானங்களில்தான் சாத்தியம். சிறிய ரக விமானங்களில் கூடுதல் எரிபொருள் தீரும்வரை வானில் வட்டமடித்த பிறகே தரையில் இறக்குவார்கள். 

விமானம் பறந்துகொண்டிருக்கும்போது அதை மின்னல் தாக்கினால் என்ன ஆகும்? 

ஒரு சேதமும் ஏற்படாது. விமானத்தின் அலுமினியத்தாலான உடல் அதைக் கடத்திவிடும். 

விமானம் பறக்கும்போது கழிப்பறையில் உள்ளவை கீழே கொட்டிவிடுமா? 

இல்லை. விமானக் கழிப்பறையில் சேரும் கழிவுகள் விமானத்தின் கடைசிப் பகுதியில் உள்ள கழிவுத் தொட்டிக்கு அவ்வப்போது சென்றுவிடும். அது வெளியே சிந்தாது, சிதறாது. 

விமானி அறையிலிருந்து வரும் மணியோசைக்கு என்ன அர்த்தம்?

 இரு விதமான தேவைகளுக்காக மணியை ஒலிப்போம். முதல் வகை, இன்டர்காமில் பேசுங்கள் என்று விமானப் பணிக்குழுவினரை அழைப்பதற்காக. இரண்டாவது, விமானம் 10,000 அடி உயரத்தை எட்டிய பிறகு சீட் பெல்டைப் பயணிகள் தளர்த்தலாம் என்று அறிவிப்பதற்காக, மீண்டும் தரை இறங்குவதற்கு முன்னால் சீட் பெல்டைப் போடுங்கள் என்று கூறுவதற்காக. சில வேளைகளில் சீட் பெல்டை யாராவது போடவில்லை என்பதை எங்கள் முன்னால் உள்ள விளக்கு எரிந்து எச்சரித்தால் விமானப் பணிக்குழுவினருக்கு அதைத் தெரிவிப்பதற்காகவும். 

சில விமான நிலையங்களுக்கு 3 எழுத்தில் நீங்கள் வைத்திருக்கும் பெயர்கள் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றனவே? 

சிலரை நினைவுகூர்வதற்காகவும் சில வேளைகளில் ஆபாசமான பொருள் தரும் வாசகங்களைத் தவிர்ப்பதற்காகவும் விமான நிலையங்களின் பெயர்களைச் சுருக்குகிறார்கள், அது விமானிகளுடைய பயன்பாட்டுக்கானது, பயணிகள் அதுகுறித்துக் கவலைப்பட ஏதும் இல்லை. 

நவீன ரக விமானங்கள் அதுவாகவே பறந்துவிடுமாமே? 

நிச்சயம் இல்லை. மருத்துவமனைகளில் கட்டப்படும் நவீன அறுவைக்கூடமே நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்துவிடுமா என்ன? 

விமானம் பறக்கத் தொடங்கும்போதும் தரை இறங்கும்போதும் பயணிகள் தங்களுக்கு முன்னால் இருக்கும் சீட் டிரேக்களை மூடி வைக்க வேண்டும், விளக்குகளின் வெளிச்சத்தைக் குறைக்க வேண்டும், சீட் பெல்டுகளைப் போட வேண்டும். கண்ணாடிகளைத் திரைபோட்டு மூட வேண்டும் என்றெல்லாம் ஏன் கழுத்தறுக்கிறீர்கள்? 

விமானம் திடீரென தன்னுடைய வேகத்தை இழந்தால் இருக்கையிலிருந்து நீங்கள் முன்னே வீசப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது நீங்கள் நிலைகுலையாமல் இருக்கவும் முன்புற சீட்டின் பின்னால் போய் முட்டிக்கொள்ளாமல் இருக்கவும் சீட் பெல்ட் போட்டு டிரேயை மூடி வைக்குமாறு கூறுகிறோம். விளக்கு வெளிச்சத்தைக் குறைப்பதும் கண்ணாடிகளின் திரையைப் போடுவதும் விமானத்துக்குள் ஏதாவது பறந்து விழுகிறதா, நெருப்புப் பிடித்து எரிகிறதா என்று விமானப் பணிப்பெண்கள் எளிதாகப் பார்ப்பதற்காகத்தான். இது பாதுகாப்பு நடவடிக்கை, பயணிகளின் நலனில் அக்கறை கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. 

விமானம் பறக்கும்போது பயணிகள் நன்றாகத் தூங்க வேண்டும் என்பதற்காக விமானத்துக்குள் ஆக்சிஜன் அளவு குறைக்கப்படும் என்கிறார்களே? 

சுத்த அபத்தம், அப்படி எங்கும் செய்வதில்லை. 

விமானம் பறக்கும்போது பயணி யாராவது கிறுக்குப்பிடித்து கதவைத் திறந்துவிட வாய்ப்பு இருக்கிறதா? 

விமானம் பறக்கும்போது கதவுகளையோ அவசர வழிகளையோ யாராலும் திறக்க முடியாது. விமானி அறையில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பு அதை அனுமதிக்கவே அனுமதிக்காது. 

கைபேசிகளும் மடிக்கணினிகளும் ஆபத்தானவையா? 

அது நேரத்தையும் சூழலையும் பொறுத்தது. கைபேசிகளைக் கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யலாம் என்பதும் ஒரு காரணம். பல வேளைகளில் சோம்பேறித்தனத்தாலோ, இறங்கி வீட்டுக்குப் போகும் அவசரத்திலோ சில பயணிகள் கைபேசிகளை மறந்து விமானத்திலேயே விட்டுச் செல்கின்றனர். இது தற்செயலா, திட்டமிட்டா என்று தெரியாதபோது பதற்றம் ஏற்படுகிறது. எனவேதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. விமானம் உயரக் கிளம்பும்போதோ தரை இறங்கும்போது அதில் ஏற்படும் வேக மாறுதல்களின்போது மடிக்கணினி கையிலிருந்து நழுவி வெகு வேகமாகப் பறக்கத் தொடங்கலாம். அப்போது அது யார் மீதாவது பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படலாம்.டேப்லட்டுகள், மின் புத்தகங்கள் போன்றவற்றை விமானிகளே இப்போது விமானத்துக்குள் பயன்படுத்துவதால் அவற்றின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாமா என்று விமானப் பயண நிர்வாகிகள் சிந்தித்துவருகின்றனர்.