Monday 15 September 2014

வேலை உங்களைத் தேடி வர வேண்டுமா?

தகுதி என்பதில் உள்ள 'த' என்பது தன்னம்பிக்கையையும், 'கு' என்பது குறிக்கோளையும், 'தி' என்பது திறமையையும் குறிக்கிறது. ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி.
 
தன்னம்பிக்கைக்கான பண்புகள்
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள கீழ்க்காணும் பண்புகள் வேண்டும்.

 1. உங்களுடைய தோல்விகளுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். ஒருபோதும் மற்றவர்களைக் குறை கூறாதீர்கள்.
2. திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள்.
3. சுயபச்சாதாபம் கொள்ளாதீர்கள். 

தோல்வி வந்தால் இனிமேல் தோல்வி நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். சிந்திக்கத் சிந்திக்க தெளிவு பிறக்கும். தெளிவான மனம் ஆற்றலின் அட்சயப் பாத்திரமாக மாறும். வெற்றி உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும். 

ஆனால் தோல்வி தான் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். தோல்விக்குப் பொறுப்பேற்கும் போதுதான் தன்னம்பிக்கையும் மனவலிமையும் அதிகமாகிறது. 

அத்துடன் சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத்திறன் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் திறன், இயக்கத்திறன் போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளும்போது, தன்னம்பிக்கையும் கூடவே வளர்கின்றது. நம்மாலும் முடியும் என்ற எண்ணமே தன்னம்பிக்கையாகும். 

தொடர் முயற்சி
ஒருபோதும் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிப் பரிதாபப்படாதீர்கள். ஒரு சிறிய விதையின் உள்ளே விருட்சம் இருப்பதைப் போல உங்களுக்குள்ளாகப் பரிபூரண
ஆற்றல் மறைந்திருக்கிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு அவற்றையெல்லாம் சாதனைகளாக்குங்கள். முதலில் தோல்வி நேர்ந்தாலும் முயல முயல வெற்றிகள் மலரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். 

மேற்கண்ட தகுதியுடன் தொழில் சார்ந்த நுட்பத்திறனும் (Technical Skills), மனித உறவுத்திறனும் (Human Relation Skills) உங்களுக்கு இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்! 

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் தேவையான திறன்களையும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு லட்சியச் சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம். 

பரவலாகவா, ஆழமாகவா?
பலர் நிறையப் படிப்பது எங்காவது பயன்படும் என்று ஸ்திரமாக நம்புகிறார்கள். என் அறிவுரை இதுதான்: நிறையப் பாடங்களைப் பரவலாக மேம்போக்காகப் படிப்பதை விட ஒரு விஷயத்தை ஆழமாகத் தொடர்ந்து படியுங்கள். பட்டத்தைவிடப் பாட அறிவும், செய்திறனும், அதனைச் சந்தைப்படுத்தும் முறைகளும் முக்கியம்.
எது படித்திருந்தாலும் அத்துறையில் வந்த புது விஷயங்களைத் தொடர்ந்து படித்துப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். அதுதான் நிஜமான அறிவு. பெயருக்குப் பின் வரும் பட்டங்கள் அல்ல. 

பெருங்காய டப்பாவா?
நீங்கள் செய்யும் வேலை தான் உங்கள் அறிவையும் திறனையும் வெளிப்படுத்தும். நீங்கள் என்றோ வாங்கிய பட்டங்கள் முன்பு பயன்பட்டது போல வருங்காலத்தில் பயன்படாது.
முன்பெல்லாம் ஒரு முறை படித்து விட்டு ஒரு முறை வேலைக்கு சேர்ந்தால் அது காலம் முழுதும் கை கொடுக்கும். இன்று படிப்பு, வேலை, தொழில் அனைத்தும் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து கற்க வேண்டிய வித்தையாக மாறி வருகிறது என்பதுதான் உண்மை!
உங்கள் படிப்பு காலி பெருங்காய டப்பாவா அல்லது அட்சயப் பாத்திரமா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!! 

மென் திறன்கள்
மென் திறன் தகுதிகள் என்பது, படிப்பைத்தவிர, உங்களுடைய பேச்சுத் திறன், தலைமைப் பண்பு, நம்பகத்தன்மை, உங்களுடைய தனிப்பட்ட குணாதிசயங்கள், நீங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வல்லவரா, நீங்கள் பயந்தாங்கொள்ளியா, பொது இடங்களில் பேசுவதற்குக் கூச்சப்படுவீர்களா, எதிர் பாலினத்தவரிடம் பேச யோசிப்பீர்களா போன்றவையாகும். 

இது தவிர, நேரக்கட்டுப்பாடு, எதுவும் முடியும் என்ற பாசிட்டிவ்வான எண்ணம், கூர்ந்து கவனிக்கும் திறன், உங்களுடைய ஆளுமைத் திறன், தன்னையும் மற்றவரையும் எந்நேரமும் உத்வேகப்படுத்துதல் உள்ளிட்டவையே. இன்றைய சூழ்நிலையில் அவசியமாகின்றன.
இந்தத் தகுதிகள் அனைத்து மனிதர்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு இருந்தே ஆக வேண்டும்.
# யதார்த்தமாக வாழப் பழகிக்கொள்வது
# கல்வியோடு கூட மென் திறன்களையும் தெரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது
# நம்மால் முடியும் என்ற முழு தன்னம்பிக்கை
என்ற மூன்றையும் கடைபிடித்தால் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.