தடைக்கல்லும் படிக்கல்லும்
கெட்டதில்தான் இருக்கும் நல்லது
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நாம் எப்படி உணர்ந்து அதை எப்படி 
அணுகுகிறோம் என்பது மிகவும் முக்கியம் என்று சொல்லும் ஹாலிடே தடைக்கல்லை 
படிக்கல்லாக்கும் அணுகுமுறையை நாம் கடைபிடிக்கும் போது நமக்கு சிறந்த பலமாக
 இது இருக்கின்றது. அதை கடைபிடிக்கத் தவறினால் அது பலவீனமாக மாறுகிறது. 
தடைகளை எதிர்த்துப் போராடுவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பானது, நாம் அந்த 
தடைகளை ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் எளிமையாகவும், நேர்மையாகவும் 
அணுகுவதிலேயே இருக்கின்றது. கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப்போல ஒவ்வொரு 
தடையிலும், சோதனையிலும் கண்டிப்பாக ஒரு “வெற்றி வாய்ப்பு” 
ஒளிந்துகொண்டிருக்கிறது என்கிறார் ரயன் ஹாலிடே. 
நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை. நமது எண்ணங்களே அதை அவ்வாறாக 
மாற்றுகிறது என்று சொன்ன ஷேக்ஸ்பியரை மேற்கோள் காட்டும் ஹாலிடே ஒரே 
சூழ்நிலை, ஒருவருக்கு பாசிடிவ்வாகவும் மற்றொருவருக்கு நெகடிவ்வாகவும் 
அமைவதை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம் என்கின்றார். 
மழை, டுவீலரில் அலுவலகம் சென்றுவரும் ஒருவருக்கு இடையூறாகத் தெரிகிறது, 
அந்த மழையே ஒரு விவசாயிக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. அதனால் 
எண்ணங்களைக்கொண்டு சூழ்நிலை களையும், செயல்களையும் மதிப்பிடுங்கள் 
என்கிறார் ரயன் ஹாலிடே. 
எந்தவொரு சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்பட்டு பொங்கிவிடக் கூடாது என்று 
கூறும் ஹாலிடே, உணர்ச்சிவசப்பட்டு அதன்மூலம் பீதி அடைவதனால், நாம் நமது 
செயலில் தவறுகளை உடனடியாகச் செய்ய ஆரம்பிக்கிறோம் என்கிறார். எந்த ஒரு 
சூழ்நிலையிலும் பீதியடை யாமலிருக்கும் கலையே அமெரிக்க விண்வெளி 
வீரர்களுக்கு முதலில் கற்றுத்தரப்படுகிறது. அதனாலேயே அணுகுமுறையில் மாற்றம்
 செய்தால் எளிதில் வெற்றியடையலாம் என்று கூறும் ஹாலிடே, அமெரிக்க திரைப்பட 
நடிகரும் தயாரிப்பாளருமான ஜார்ஜ் க்ளூனி சந்தித்த ஆரம்பகால நிராகரிப்பு களை
 வரிசையாய் நினைவுகூர்கிறார். மாறுபட்ட அணுகு முறையால் மட்டுமே அவரால் 
ஹாலிவுட்டில் வெற்றிபெற முடிந்தது என்கிறார். 
ட்ரை பண்ணுங்க சார்
தைரியத்தின் அவசியத்தை ஹாலிடே மிகவும் அறிவுறுத்திச் சொல்கின்றார். 
தைரியமான செயல் பாடுகள் மட்டுமே எப்போதும் நம்மை முன்னேற்றப்பாதையில் 
கொண்டு செல்லும், அதற்காக தைரியம் என்றால் துடுக்கான, முரட்டுத்தனமான வேகம்
 என்று நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறும் ரயன் ஹாலிடே நமது 
செயல்களும், முடிவுகளுமே நம்முடைய வெற்றியை மட்டுமல்ல நம்மையே 
தீர்மானிக்கின்றன என்கிறார். ஒரு இலக்கை நோக்கி நாம் புறப்பட்டுப் 
போய்க்கொண்டிருக்கும் நேரம், எதிர்கொள்ளும் தடைகளால் கோபமடைந்து, என்ன 
செய்வதென்றே தெரியாமல் அமைதியாக இருந்து விடக்கூடாது. 
மேலும், மேலும் முயற்சி செய்து கொண்டிருக்கவேண்டும். அப்படி முயற்சி 
செய்யத் தவறும்போது நாம் ஒரு அடி கூட முன் வைக்க முடியாமல், இருக்கும் அதே 
நிலையிலேயே இருந்துவிடுவோம். அது கூடப் பரவாயில்லை. ஏன் இப்படியே போனால் 
ஒரு ஸ்டேஜில் வேறு எந்த ஒரு காரியத்தையும் - ஏன் எதையுமே செய்ய முடியாத 
நிலைக்குக் கூடத் தள்ளப்பட்டு விடுவோம் என்று எச்சரிக்கிறார் ரயன் ஹாலிடே. 
1878-ல் மின்சாரத்தின் மூலம் எரியும் பல்பை கண்டுபிடிக்க ஒரு கூட்டமே 
முயற்சித்துக்கொண்டு இருந்தது. 
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மெட்டீரியலினால் ஆன இழைதனைக் கொண்டு பல்பை தயாரிக்க 
முயன்று கொண்டும் அதில் தோல்வியடைந்துகொண்டும் இருந் தார்கள். ஆனால் தாமஸ் 
ஆல்வா எடிசன் மட்டுமே சுமார் ஆறாயிரம் வகை மெட்டீரியல்களினால் ஆன இழைகளை 
வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக டெஸ்ட் செய்ய தயாராக இருந்தார். ஒவ்வொரு 
முறையும் தீர்வை நோக்கி சென்று தோல்வியுற்று மீண்டும் மற்றொன்றின் மூலம் 
முயற்சி செய்து இறுதியாக டங்க்ஸ்டன் இழையை உபயோகித்து பல்பை எரிய வைத்து 
வெற்றியும் பெற்றார். 
ஒரு செயலில் முயற்சிசெய்து சில தடைகளினால் தோல்வியடைகின்றீர்கள், அந்தச் 
செயலை அத்தோடு விட்டுவிடாமல் தொடர்ந்து சிந்தித்து மேம்படுத்தப்பட்ட புதிய 
முறையில் அப்ரோச் செய்யும்போது அந்த தோல்வியே வெற்றிக்கு உண்டான மூலதனமாக 
மாறுகின்றது. ஒவ்வொரு முறை தோல்வியின்போதும் நமக்கு ஒரு புது வாய்ப்பு 
கிடைக்கிறது, அதாவது தடைகளே வழிகளாக மாறுகின்றன. அப்புறமென்ன ட்ரை 
பண்ணிகிட்டே இருக்க வேண்டியதுதானே!. 
தோல்வியே அதிகம் பரிசோதிக்கப்படுகின்றது
முற்காலத்தில் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் யூகத்தின் அடிப்படையிலேயே
 கஸ்டமர்களின் தேவைகளை அறிந்து அதனை தயாரித்து கொடுத்துவந்தன. எத்தனை யோ 
புராடக்ட்கள் லாஞ்ச் செய்யப்பட்ட நாளிலேயே பிளாப் ஆன செய்திகளைப் 
பார்த்திருக்கிறோம். அந்த நிமிடமே புராடக்ட்டுக்காக செய்யப்பட்ட அத்தனை 
உழைப்பும் வீணாகிறது. ஒருவேளை அது வெற்றி அடைந்திருந்தால், அந்த 
வெற்றிக்குப்பின்னால் இருக்கும் செயல்களை நிறுவனத்தில் யாரும் பெரிதாக 
ஆராய்ந்து தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. 
ஆனால் தோல்வி அடைந்ததால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து, மாறுதல்கள் பல 
செய்து மீண்டும் கஸ்டமர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சியெடுக்கின்றார்கள். 
வெற்றி களைவிட தோல்விகளே அதிகம் கவனிக்கப்பட்டு வலிமையடை கிறது என்பது 
இதிலிருந்து தெரிகின்ற தில்லையா என்கின்றார் ஹாலிடே. 
என்னவொரு தைரியம்
வாழ்க்கையில் நடக்குற ஒவ்வொரு நிகழ்வையும் லவ் பண்ணுங்க, அது நல்லதோ 
கெட்டதோ, அந்த நேரத்தில் அதை என்ஜாய் செய்துவிடவேண்டும். மேலும் அதற்கான 
மனவலிமையும் வேண்டும். தனது 67வது வயதில், தாமஸ் எடிசன் ஒரு நாள் மாலை தன் 
ஆய்வுக்கூடத்திலிருந்து வீடு திரும்பி டின்னரை முடித்த சிறிது நேரத்தில், 
தனது ஆய்வுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதை தெரிந்துக்கொள்கிறார். 
தீயணைப்பு வண்டிகள் பல வந்தும் தீயை அணைக்க முடியவில்லை. பல கெமிக்கல்கள் 
சேர்ந்து மஞ்சள் பச்சை என தீயானது கலர் கலராக எரிந்துகொண்டிருந்தது.
வேகமாக அங்கு வந்த எடிசன் தன் மகனிடம் உடனே போய் உன் அம்மாவையும், அவளோட 
நண்பிகளையும் அழைத்துக் கொண்டுவா என்றார். ஏன் தெரியுமா? இதுபோன்ற தீ 
விபத்து நிகழ்வை மறுபடியும் அவர்களால் ஒருபோதும் பார்க்கமுடியாது 
என்பதால்தான். அவரைப்பொருத்தவரை விபத்து நடந்துவிட்டது, அதை இனி தடுக்க 
முடியாது அதேசமயம் அதை என்ஜாய் பண்ணுவதை இழக்கவும் அவர் விரும்பவில்லை. 
முறையான அணுகுமுறை, அதற்கேற்ற செயல்பாடு மற்றும் மனவலிமை மூன்றும் 
சேரும்போது எளிதாக தடைகளை படிகளாக மாற்றி வெற்றிபெற முடியும் என்பதே இந்த 
புத்தகத்தின் மூலம் ரயன் ஹாலிடே நமக்கு சொல்லும் செய்தி. 
No comments:
Post a Comment