விமானம் பறக்கும்போது திடீரென தூக்கித்தூக்கிப் போடுவதும் அப்படியும்
இப்படியும் அலைக்கழிப்பதும் குலுங்குவதும் என்னைக் குலைநடுங்கச் செய்கிறது,
செத்துவிடுவோமோ என்றுகூட அஞ்சுகிறேன், இந்த அச்சம் நியாயமானதுதானே?
இல்லை. விமானத்தை அப்படியே தலைகீழாகத் தூக்கிப் போடும்படியோ,
விண்ணிலிருந்து வீசி எறியும் வகையிலோ எதுவும் நடந்துவிடாது.காற்றழுத்தம்
குறைவான வான் பகுதியில் விமானம் செல்லும்போது குலுங்குவது இயல்பானது. அது
உங்களுக்கு அச்சத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம், ஆனால் அதனால்
விமானம் கீழே விழுந்துவிடாது.
ஜெட் விமானத்தின் எல்லா இன்ஜின்களும் செயலிழந்துவிட்டால் விமானத்தால் பத்திரமாகத் தரை இறங்க முடியுமா?
முடியும். மலையிலிருந்து கீழே இறங்கும்போது உங்களுடைய கார் இன்ஜினை
அணைத்துவிட்டால் எத்தனை ஆபத்தோ அத்தனை ஆபத்து இதில் இருந்தாலும்
விமானத்தைத் தொடர்ந்து இயக்கவும் தரையில் இறக்கவும் முடியும்.
விமானத்திலிருந்து எரிபொருளைக் கொட்டிவிட முடியும் என்று தெரிகிறது,
விமானம் இறங்கும்போது எடை குறைய வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்களா?
ஆமாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்ல. விமானம் மேலே எழும்போது இருக்கும்
எடையைவிட கீழே இறங்கும்போது இருக்கும் எடையானது அதற்கு அழுத்தத்தை
ஏற்படுத்துகிறது. நெருக்கடியான நேரங்களில் அந்த நெருக்கடியைக் குறைக்க
எரிபொருள் வெளியே கொட்டப்படுகிறது. இது அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்லும்
பெரிய விமானங்களில்தான் சாத்தியம். சிறிய ரக விமானங்களில் கூடுதல்
எரிபொருள் தீரும்வரை வானில் வட்டமடித்த பிறகே தரையில் இறக்குவார்கள்.
விமானம் பறந்துகொண்டிருக்கும்போது அதை மின்னல் தாக்கினால் என்ன ஆகும்?
ஒரு சேதமும் ஏற்படாது. விமானத்தின் அலுமினியத்தாலான உடல் அதைக் கடத்திவிடும்.
விமானம் பறக்கும்போது கழிப்பறையில் உள்ளவை கீழே கொட்டிவிடுமா?
இல்லை. விமானக் கழிப்பறையில் சேரும் கழிவுகள் விமானத்தின் கடைசிப்
பகுதியில் உள்ள கழிவுத் தொட்டிக்கு அவ்வப்போது சென்றுவிடும். அது வெளியே
சிந்தாது, சிதறாது.
விமானி அறையிலிருந்து வரும் மணியோசைக்கு என்ன அர்த்தம்?
இரு விதமான தேவைகளுக்காக மணியை ஒலிப்போம். முதல் வகை, இன்டர்காமில்
பேசுங்கள் என்று விமானப் பணிக்குழுவினரை அழைப்பதற்காக. இரண்டாவது, விமானம்
10,000 அடி உயரத்தை எட்டிய பிறகு சீட் பெல்டைப் பயணிகள் தளர்த்தலாம் என்று
அறிவிப்பதற்காக, மீண்டும் தரை இறங்குவதற்கு முன்னால் சீட் பெல்டைப்
போடுங்கள் என்று கூறுவதற்காக. சில வேளைகளில் சீட் பெல்டை யாராவது போடவில்லை
என்பதை எங்கள் முன்னால் உள்ள விளக்கு எரிந்து எச்சரித்தால் விமானப்
பணிக்குழுவினருக்கு அதைத் தெரிவிப்பதற்காகவும்.
சில விமான நிலையங்களுக்கு 3 எழுத்தில் நீங்கள் வைத்திருக்கும் பெயர்கள் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றனவே?
சிலரை நினைவுகூர்வதற்காகவும் சில வேளைகளில் ஆபாசமான பொருள் தரும்
வாசகங்களைத் தவிர்ப்பதற்காகவும் விமான நிலையங்களின் பெயர்களைச்
சுருக்குகிறார்கள், அது விமானிகளுடைய பயன்பாட்டுக்கானது, பயணிகள்
அதுகுறித்துக் கவலைப்பட ஏதும் இல்லை.
நவீன ரக விமானங்கள் அதுவாகவே பறந்துவிடுமாமே?
நிச்சயம் இல்லை. மருத்துவமனைகளில் கட்டப்படும் நவீன அறுவைக்கூடமே நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்துவிடுமா என்ன?
விமானம் பறக்கத் தொடங்கும்போதும் தரை இறங்கும்போதும் பயணிகள் தங்களுக்கு
முன்னால் இருக்கும் சீட் டிரேக்களை மூடி வைக்க வேண்டும், விளக்குகளின்
வெளிச்சத்தைக் குறைக்க வேண்டும், சீட் பெல்டுகளைப் போட வேண்டும்.
கண்ணாடிகளைத் திரைபோட்டு மூட வேண்டும் என்றெல்லாம் ஏன்
கழுத்தறுக்கிறீர்கள்?
விமானம் திடீரென தன்னுடைய வேகத்தை இழந்தால் இருக்கையிலிருந்து நீங்கள்
முன்னே வீசப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது நீங்கள் நிலைகுலையாமல்
இருக்கவும் முன்புற சீட்டின் பின்னால் போய் முட்டிக்கொள்ளாமல் இருக்கவும்
சீட் பெல்ட் போட்டு டிரேயை மூடி வைக்குமாறு கூறுகிறோம். விளக்கு
வெளிச்சத்தைக் குறைப்பதும் கண்ணாடிகளின் திரையைப் போடுவதும்
விமானத்துக்குள் ஏதாவது பறந்து விழுகிறதா, நெருப்புப் பிடித்து எரிகிறதா
என்று விமானப் பணிப்பெண்கள் எளிதாகப் பார்ப்பதற்காகத்தான். இது பாதுகாப்பு
நடவடிக்கை, பயணிகளின் நலனில் அக்கறை கொண்டே மேற்கொள்ளப்படுகிறது.
விமானம் பறக்கும்போது பயணிகள் நன்றாகத் தூங்க வேண்டும் என்பதற்காக விமானத்துக்குள் ஆக்சிஜன் அளவு குறைக்கப்படும் என்கிறார்களே?
சுத்த அபத்தம், அப்படி எங்கும் செய்வதில்லை.
விமானம் பறக்கும்போது பயணி யாராவது கிறுக்குப்பிடித்து கதவைத் திறந்துவிட வாய்ப்பு இருக்கிறதா?
விமானம் பறக்கும்போது கதவுகளையோ அவசர வழிகளையோ யாராலும் திறக்க முடியாது.
விமானி அறையில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பு அதை அனுமதிக்கவே அனுமதிக்காது.
கைபேசிகளும் மடிக்கணினிகளும் ஆபத்தானவையா?
அது நேரத்தையும் சூழலையும் பொறுத்தது. கைபேசிகளைக் கொண்டு வெடிகுண்டுகளை
வெடிக்கச் செய்யலாம் என்பதும் ஒரு காரணம். பல வேளைகளில்
சோம்பேறித்தனத்தாலோ, இறங்கி வீட்டுக்குப் போகும் அவசரத்திலோ சில பயணிகள்
கைபேசிகளை மறந்து விமானத்திலேயே விட்டுச் செல்கின்றனர். இது தற்செயலா,
திட்டமிட்டா என்று தெரியாதபோது பதற்றம் ஏற்படுகிறது. எனவேதான்
எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. விமானம் உயரக் கிளம்பும்போதோ தரை
இறங்கும்போது அதில் ஏற்படும் வேக மாறுதல்களின்போது மடிக்கணினி கையிலிருந்து
நழுவி வெகு வேகமாகப் பறக்கத் தொடங்கலாம். அப்போது அது யார் மீதாவது
பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படலாம்.டேப்லட்டுகள், மின் புத்தகங்கள்
போன்றவற்றை விமானிகளே இப்போது விமானத்துக்குள் பயன்படுத்துவதால் அவற்றின்
மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாமா என்று விமானப் பயண நிர்வாகிகள்
சிந்தித்துவருகின்றனர்.